கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கரசண்பேட்டை ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பட்டியல் இனத்து குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் அருகில் இறந்து கிடக்கும் தெரு நாய் ஒன்றின் மீது பட்டு குடிநீருக்காக அத்தண்ணீர் செல்கின்றது.\r\n\r\nஇதனால் அப்பகுதி வாசிகள் குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை பருகாமல் வயல்களில் உள்ள நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து சமையல் மற்றும் இதர பணிகளை செய்து வருகின்றனர். \r\n\r\nகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இறந்து கிடந்த தெரு நாயை முத்துகிருஷ்ணாபுரம் பகுதியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அப்பகுதி மக்களே அதனை அப்புறப்படுத்தினார்கள்.\r\n\r\nதொடர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் தண்ணீர் விவசாய நிலங்களில் வீணாக செல்கிறது , இதனை பொருட்படுத்தாத ஊராட்சி மன்ற தலைவர் நீங்கள் எல்லாம் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர் உதாசீனம்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.\r\n\r\nமேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.\r\n\r\nஅதோடு மட்டுமில்லாமல் குடிநீர் தொட்டியின் அருகில் முள் புதர்கள் படர்ந்து உள்ளதால் அதனையும் சரிசெய்யாமல் கிடப்பில் கிடப்பில் போட்டுள்ளனர்.\r\n\r\nஇதனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாயில் உடைப்பை சரி செய்தும் , மினி பவர் டேங்க் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , அத்தியாவசிய வசதிகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உடனே வசதிகளை செய்து கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\r\n\r\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் அத்தியாவசியமான குடிநீர் வசதி கூட இன்னும் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. \r\n\r\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று கூறிய நம் முன்னோர்கள் , இன்று என்று தணியும் இந்த தண்ணீர் தாகம் , அத்தியாவசிய பிரச்சினைகள் என்று புலம்பிக் கொள்ளுமளவிற்கு சில மாவட்ட ஆட்சியாளர்களும் பல அரசியல்வாதிகளும் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இந்த அவல நிலை நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.\r\n\r\nஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.
