கள்ளக்குறிச்சி நகராட்சி பூங்காவில், படகு சவாரி 5, சிறுவர் நீச்சல் குளம்-2, சிறிய மலை அருவி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் 4 ஊஞ்சல்கள், சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கல் ஆகியவையுடன் அமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறக்கப்பட்டது.
\n
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பொழுதுபோக்கும் வகையில் படகு சவாரி மற்றும் சிறுவர் நீச்சல் குளம், ஊஞ்சல், சிறிய மலை அருவி ஆகியவையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
\n
\n
\n
\n
\n
இதில் நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.5, சிறுவர் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ஒரு நபருக்கு அரை மணி நேரத்துக்கு ரூ.25, படகு சவாரியில் பயணம் செய்ய அரை மணி நேரத்துக்கு ஒரு படகில் 4 பேர் பயணம் செய்திட ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்யப்படுகிறது.
\n
தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் நேற்று சுமார் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவுக்கு வருகை தந்து அங்கு விளையாடி மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குதித்து வெயிலின் தாக்கத்தை மறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
\n
\n
\n
மேலும் படகு சவாரியில் 4 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் 5 படகு சவாரியில் மக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சிறிய மலை அருவியின் உச்சியில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஏறி அமர்ந்து வெயிலின் தாக்கத்தை போக்கிடும் வகையில் அருவி தண்ணீரில் நனைத்து மகிழ்ந்தனர்.
\n
மேலும் ஊஞ்சல்கள் மற்றும் சறுக்கல் ஆகியவைகளில் விளையாடியும் மகிழ்ந்தனர்.
\n
\n
ஆனால் பூங்காவில் குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
\n
\n
\n

\n