அக்.27:- திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், “மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்”, அக்குழுவின் தலைவரும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினருமான சா.ஞான திரவியம் தலைமையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” வே.விஷ்ணு முன்னிலையில், நேற்று (அக்டோபர்.26) காலையில், நடைபெற்றது. \r\n\r\nஇந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தேசிய கிராம மின்வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், அன்ன யோஜானா திட்டம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. \r\n\r\nதிருநெல்வேலி “அரியநாயகிபுரம் சிறப்பு குடிநீர் திட்டத்தை, விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்!” என்று, இந்த கூட்டத்தில், வலியுறுத்தப்பட்டது. “அரசு திட்டங்கள் அனைத்தும், மக்களிடம் முழுமையாக போய் சேருகின்ற வகையில், அரசு அதிகாரிகள், அர்ப்பணிப்பு உணர்வுடன், பணியாற்ற வேண்டும்!” என்று, இந்த கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். \r\n\r\nகூட்டத்தில், மாவட்ட, உதவி இயக்குநர்கள் (பேரூராட்சி) மாஹீன் அபுபக்கர், (ஊராட்சிகள்) அனிதா, சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் குமாரதாஸ், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ண மூர்த்தி, மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உட்பட, அந்தந்த துறைகளின் அதிகாரிகள் என பலரும், கலந்து கொண்டனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
