அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்ற கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், \r\n\r\nபிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம் கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை கொண்டது.\r\n\r\nசுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது, நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்டதாகும். \r\n\r\nஇத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா பத்து தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா கடந்த 24ம் தேதி திங்கள்க்கிழமை தொடங்கியது. \r\n\r\nவிழாவின் 6ம் நாளான இன்று கந்தசஷ்டியை யொட்டி, உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகசுவாமிக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வகை பொருட்களை கொண்டும் அபிஷேகம் தொடர்ந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது.\r\n\r\nஅதே வேளையில், மூலவர் சுவாமிநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தங்க கவசம் மற்றும் வைர வேலுடன் அருள்பாலித்த மூலவர் சுவாமிநாதசுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.\r\n\r\nதொடர்ந்து இன்று மாலை ஸ்ரீ சண்முகசுவாமி, மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்குதலும், திருக்கோயில் வளாகத்திற்குள்ளாகவே, இரவு சூரசம்ஹாரமும் நடைபெற்று பிறகு, தங்கமயில் வாகனத்தில் சுவாமி பிரகார உலாவும், நாளை 31ம் தேதி புதன் இரவு தேவசேனா திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
